இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் 3 கிலோவுடன் சிக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விட்டதாக இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா நடவடிக்கை
திருப்பூர்
திருப்பூரில் 3 கிலோவுடன் சிக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விட்டதாக இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா நடவடிக்கை மேற்கொண்டார்.
3 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர். இவர் கடந்த மாதம் திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளார்.
ஆனால் சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டதாக கூறப்படுகிறது. அங்கு பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் தெரிவித்தும் விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 4 பேர் மீது வழக்குப்பதியாமல் விட்டுவிட்டதற்காக இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த்திடம் கேட்டபோது 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் கூறியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விட்டுள்ளனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் முக்கிய நபர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற மனு செய்தபோது, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story