வீட்டில் புகுந்து செல்போன்கள் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே வீட்டில் புகுந்து செல்போன்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே வீட்டில் புகுந்து செல்போன்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன்கள் திருட்டு
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 30). இவரது வீட்டில் கடந்த 21-ந் தேதி புகுந்த மர்ம நபர்கள், 6 செல்போன்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து சதாம் உசேன் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் கையில் பிளாஸ்டிக் பையுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
2 பேர் கைது
2 பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்தனர். அதில் 6 செல்போன்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் எம். தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (20), பெரியதுரை (19) என்பது தெரியவந்தது.
இவர்கள் சதாம் உசேன் வீட்டில் செல்போன்கள் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருடிய செல்போன்களை விற்பனைக்கு கொண்டு சென்ற போது, 2 பேரும் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து முத்துக்குமார், பெரியதுரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story