2 மாதங்களுக்கு பிறகு 101 நூலகங்கள் திறப்பு
நாகை மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு 101 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு 101 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.
நூலகங்கள் திறப்பு
கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 49 கிளை நூலகம், 49 ஊர்ப்புற நூலகம், 3 பகுதி நேர நூலகம் மற்றும் ஒரு மைய நூலகம் என மொத்தம் 101 நூலகங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன.15 வயதுகுட்பட்ட சிறுவர்கள், 65 வயது மேற்பட்டவர்கள் நூலகம் வர அனுமதியில்லை என நூலகத்தின் முன்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகள்
நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள மைய நூலகம் 2 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் திரளானோர் ஆர்வமுடன் வந்து சமூக இடைவெளியையுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து நாகை மைய நூலக அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
நாகை மைய நூலகத்திற்கு தினந்தோறும் 200 பேர் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர் இதுதவிர 100-க்கும் மேற்பட்டோர் செய்தித்தாள்கள் வாசிப்பதற்காக வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேல் நூலகங்கள் மூடப்பட்டன. இதனால் வாசகர்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து அரசின் உத்தரவின் பேரில் ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று (நேற்று) முதல் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கிருமி நாசினி
தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நூலகத்திற்கு வரும் வாசகர்கள், நூலகப் பணியாளர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாசகர்கள் கோரும் நூல்களை, நூலகப் பணியாளர்கள் நூல் அடுக்கிலிருந்து எடுத்து வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கும் நூலகர் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நூலகங்கள் திறக்கப்பட்டதால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story