பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
சின்னமனூரில் பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னமனூர்:
பிரியாணி கடை உரிமையாளர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் உதயகுமார் என்ற யூசுப் அஸ்லாம் (வயது 30). தற்போது இவர், தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்கு ரதவீதியில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசிக்கிறார். அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
மதுரை தெப்பக்குளம் புதுராமநாதபுரம் ரோடு தமிழன் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார் என்ற அப்துல்லா (35). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், இந்திய இறையாண்மைக்கு எதிராக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தெப்பக்குளம் போலீசார் அவரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
இதற்கிடையே அப்துல்லா அளித்த தகவலின் பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி யூசுப் அஸ்லாமிடம் விசாரணை நடத்துவதற்காக, சின்னமனூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் அதிகாரிகள் வந்தனர்.
தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் மைக்கேல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர், யூசுப் அஸ்லாம் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த யூசுப் அஸ்லாமின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அங்கு திரண்டனர். அவருடைய வீட்டில் சோதனையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தேசிய புலனாய்வு முகமையினரை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதாரம் எதுவுமின்றி, யூசுப் அஸ்லாம் வீட்டில் சோதனை செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து அங்கு வந்த சின்னமனூர் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர்.
நிபந்தனைகளுடன் விடுவிப்பு
இந்தநிலையில் யூசுப் அஸ்லாமின் வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு முகமையினர் வெளியேறி சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். இதேபோல் சம்மன் கொடுக்கப்பட்டு, யூசுப் அஸ்லாமும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார்.
அங்கு வைத்து அவரிடம், தேசிய புலனாய்வு முகமையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அப்துல்லாவுக்கும், யூசுப் அஸ்லாமுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள பதிவு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
இதற்கிடையே வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடாது, விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் யூசுப் அஸ்லாமை நேற்று இரவு 8 மணி அளவில் தேசிய புலனாய்வு முகமையினர் விடுவித்தனர்.
3 செல்போன்கள் பறிமுதல்
விசாரணையின் முடிவில் 3 செல்போன்கள், சிம்கார்டு, பென்டிரைவ் ஆகியவற்றை தேசிய புலனாய்வு முகமையினர் கைப்பற்றினர். அதனை அடிப்படையாக கொண்டு, அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட தேசிய புலனாய்வு முகமையினர் முடிவு செய்துள்ளனர்.
அதாவது யூசுப் அஸ்லாம் யார்? யாரிடம் பேசி இருக்கிறார். வாட்ஸ்-அப், முகநூல் மூலம் அவர் பதிவிட்ட கருத்துகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story