ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி 2 பேர் பலி
ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி 2 பேர் பலி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூர் கிராமத்தில் ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தெவ்வப்பா என்று அழைக்கப்படும் அறுவடை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காணிக்கை செலுத்தி தீப விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சோலூரை சுற்றி உள்ள ஊரட்டி, கோட்டட்டி போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திடீரென மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தீப விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி ஜெனரேட்டர் உதவியுடன் தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 5 பேர் கோவில் அருகே ஜெனரேட்டர் அறையில் தூங்க சென்றனர்.
மின் இணைப்பு கொடுக்கப்படாததால் ஜெனரேட்டர் தொடர்ந்து இயங்கி கொண்டு இருந்தது. 5 பேரும் கண் அயர்ந்து தூங்கினர். இந்த நிலையில்ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை அறை முழுவதும் பரவியது. இதனால் தூங்கியவர்களை புகை சூழ்ந்தது.
இதைதொடர்ந்து நேற்று அதிகாலை கிராம மக்கள் சிலர் வந்து அவர்களை எழுப்பினர். ஆனால் அவர்கள் எழுந்திருக்க வில்லை. புகையால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் அடைந்தது தெரியவந்தது. உடனே 5 பேரையும் மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சுபாஷ் (வயது 36), மூர்த்தி (49) ஆகிய 2 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் அஜித்குமார், வெங்கி, கோபால் ஆகிய 3 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர்கள் 3 பேரும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டி அருகே கோவில் திருவிழாவில் மூச்சுத்திணறி 2 பேர் இறந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
---
Related Tags :
Next Story