நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவர், தூத்துக்குடி பழைய பஸ் நிலைய பகுதியில் ரூ.50 கோடியில் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மீளவிட்டான் அருகே 132 ஏக்கர் பரப்பளவுள்ள சி.வ.குளத்தில் ரூ.11 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி தருவைக்குளத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கையும் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் இன்னும் நிறைவுபெறாமல் உள்ளது. அதை விரைவாக நிறைவேற்றும வகையில், பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கவும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்திடவும் திட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
தரம் உயர்வு
அரசின் பரிந்துரையின்பேரில், தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் சில நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். அதைத்தொடர்ந்து அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
விரைவில் பருவமழை காலம் தொடங்க உள்ளதால், மழைக்காலம் நிறைவு பெற்றதும் தேர்தல் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள்
ஆய்வின்போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story