ஆழியாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது


ஆழியாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
x
தினத்தந்தி 24 July 2021 9:45 PM IST (Updated: 24 July 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

பொள்ளாச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம்100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

 பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7  டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நீரை ஆழியாற்றில் மணக்கடவு என்ற இடத்தில் கேரளாவுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. 

இதை தவிர பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

100 அடியை எட்டியது

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

 இதற்கிடையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. கோடை காலத்தில் வெளியே தெரிந்த பாறைகள் நீரில் மறைந்து அணை கடல் போன்று காட்சி அளிக்கிறது. 

கடந்த 17-ந் தேதி அணையின் நீர்மட்டம் 84 அடியாக இருந்தது. தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கடந்த 7 நாட்களில் 16 அடி உயர்ந்து உள்ளது. இதனால் ஆழியாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது

நீர்வரத்து கண்காணிப்பு

ஆழியாறு அணையில் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி நீரை சேமிக்கலாம். தற்போது அணையில் 2 ஆயிரத்து 664 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

 அணை முழுகொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 1200 மில்லியன் கன அடி நீர் தேவைப்படுகிறது. இன்று (நேற்று) பகல் 1 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.

அணைக்கு அப்பர் ஆழியாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை முழுகொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே நீர்வரத்தை  கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story