கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக போலீசார் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 47 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக போலீசார் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 47 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 10:20 PM IST (Updated: 24 July 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 47 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 47 பேரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்று போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கடந்த 22-ந் தேதி மாவட்டம் முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் பான்மசாலா, பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்ற 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் குடோன்களில் இந்த சோதனை நடந்தது.
47 பேர் கைது 
மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, மகாராஜகடை, வேப்பனப்பள்ளி, ஓசூர், சூளகிரி, மத்திகிரி, பாகலூர், பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, ஊத்தங்கரை, கல்லாவி, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடந்தது.
இதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாக காரிமங்கலம் பிரபு (வயது 37), குருபரப்பள்ளி பிரபாகரன் (29), பெலவர்த்தி ராஜேந்திரன் (43), தீர்த்தம் சங்கர் (48) உள்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராயக்கோட்டை-மத்தூர்
ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார்   லிங்கனம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. இதனால் கடையின் உரிமையாளரான சின்னமுனியப்பன் (47), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாதேஷ் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாதேசை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story