பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 July 2021 11:48 PM IST (Updated: 24 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதான பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்

சிவகங்கை,

நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதான பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பத்ம விருது

இது தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம், மற்றும் தொழில், ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவில் நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதான பத்மவிருது வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வருகிற ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த தனித்தன்மைக் கொண்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருது பெற விரும்புபவர்கள் தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது எப்பொழுதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும். விருதிற்கு விண்ணப்பிப்பவர்களின் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

தர நிர்ணயம்

இந்த விருது உயர்ந்த தரநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும். பத்ம விருதுகள் நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதாக இருப்பதால் இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மானிய விருதோ பெற்றிருக்கவேண்டும்.
விருதிற்கு உரியவரை தேர்ந்தெடுக்கப்படும் போது சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இவ்விருதிற்கு பரிந்துரை செய்யப்படும்.சிறந்த சாதனையாளராக இருந்து இறந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை. இருந்த போதும் மிக தகுதியானவர்களுக்கு இந்த விருது அறிவிக்கும் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் இறந்திருந்தால் அவர்கள் இவ்விருதிற்கு பரிசீலிக்கப்படலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க இவ்விருது பெற்ற நாளிலிருந்து 5 வருடத்திற்கு பின்னரே விண்ணப்பிக்க முடியும். அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்களைwww.padmaawards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க வருகிற 15.9.2021-ந் தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story