லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது, தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை; எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது, தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்
பேட்டி
கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் எனது இல்லத்திலும், கரூரில் உள்ள எனது அலுவலகங்களிலும், எனது உதவியாளர்கள், நண்பர்களுடைய வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். இதுசம்பந்தமாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
வழக்குகள்
சோதனையின்போது எங்களுடைய மாவட்ட வழக்கறிஞர்கள் உடன் இருந்து அங்கு என்னென்ன ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டது என்பதற்கான நகலை பெற்று இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது பணம் எடுத்து இருக்கிறார்கள். அதற்கு கணக்கு இருக்கிறது. எங்களுடைய 4 நிறுவனங்களில் அதற்கான கணக்கு உள்ளது.
அதை நாங்கள் காவல்துறையினர் சம்மன் கொடுக்கும் போது, அதற்கு உண்டான முறையான பதிலை தெரிவிப்போம். இதுமாதிரியான பொய் வழக்குகள் போட்டு கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. செயல்பாடுகளை தடுத்து விடலாம் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பொய் பிரசாரம்
தேர்தலுக்கு பிறகு பொறுப்பில் இருக்க கூடிய உள்ளாட்சி, கூட்டுறவு பொறுப்பில் இருக்கக்கூடிய நிர்வாகிகளை அழைத்து அவர்களை மிரட்டி, மாற்று கட்சியில் சேர்க்கின்ற வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக தற்போது இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதை நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி எதிர்கொள்வோம். நான் அதிகாரத்தை வைத்துகொண்டு தொழில்கள் தொடங்கியதாக சொல்கிறார்கள்.
எனக்கு சென்னையில் சொந்த வீடு கிடையாது. கரூரிலும் எனக்கு சொந்த வீடு கிடையாது. இரண்டும் வாடகை வீடுதான். ஆனால், நான் கிட்டதட்ட 35 ஆண்டுகளாக டையிங் பேக்டரி, டெக்ஸ்டைல், கிரசர்யூனிட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறேன். நான் மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறியதாகவும், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பொய் பிரசாரத்தை பரப்புகிறார்கள். அப்படியெல்லாம் செய்து கட்சிக்கு ஆட்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அராஜக போக்கு
கொரோனா காலம் என்பதால் தொண்டர்கள் அமைதியாக இருக்கிறார்கள். கொரோனாவின் முதல் அலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கையாண்டதால் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது. தற்போது 2-ம் அலையில் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசியல் நடக்கிறது. இதுபோன்ற தி.மு.க.வின் அராஜக போக்கு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
மின்கட்டணம் பலமடங்கு அதிகமாக உள்ளது. அதற்கான சரியான விளக்கம் இல்லை. 200 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்களுக்கு தற்போது 500 ரூபாய் வருகிறது. போக்குவரத்துத்துறையில் அ.தி.மு.க. தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை பணியிட மாற்றம் (டிரான்ஸ்பர்) செய்கிறார்கள். இதுபோன்று அனைத்துத்துறைகளிலும் பணியிட மாற்றம் நடந்து வருகிறது. எனது வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story