ராசிபுரம் அருகே பட்டதாரி வாலிபர் கொலை: 10 மாதங்களுக்கு பிறகு ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது


ராசிபுரம் அருகே பட்டதாரி வாலிபர் கொலை: 10 மாதங்களுக்கு பிறகு ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2021 12:48 AM IST (Updated: 25 July 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே பட்டதாரி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம்:
பட்டதாரி வாலிபர்
ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம்-போடிநாயக்கன்பட்டி புறவழிச் சாலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் ராசிபுரம் போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும் இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் ராசிபுரம் அருகேயுள்ள பல்லவநாயக்கன்பட்டி கிராமம், மேற்கு வலசு அருந்ததியர் தெருவை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சரவணன் என்பது தெரியவந்தது. 
தீவிர விசாரணை
சரவணன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவருடைய பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணையில் தொட்டியவலசு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் (வயது 45) மற்றும் இவருடைய நண்பர்கள் சேர்ந்து சரவணனை கொலை செய்தது தெரிந்தது.
அடித்துக்கொலை
இதையடுத்து நேற்று முன்தினம் சரவணன் மர்மசாவு வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கொலை செய்யப்பட்ட சரவணனுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரிந்தது. 
இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி, மல்லூர் அருகே கார்த்திகேயன், இவருடைய நண்பர்கள் கோபிசங்கர் (36), பிரவீன்குமார் (35) உள்பட 4 பேர் சரவணனை தாக்கியதும், பின்னர் அல்லேரி முனியப்பன் கோவில் செல்லும் வழியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்திற்கு கடத்தி சென்று அடித்துக்கொலை செய்ததும் தெரிந்தது. 
பின்னர் சரவணனின் உடலை, கார்த்திகேயன் மற்றும் கோபிசங்கர் ஆகியோர் மோட்டார் சைக்கிள் மூலம் அணைப்பாளையம் பகுதியில் வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
ஊராட்சி மன்ற தலைவர் கைது
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், கோபிசங்கர், பிரவீன்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
கைது செய்யப்பட்ட கோபிசங்கர் மூக்குத்திப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் என்பதும், பிரவீன்குமார் செல்போன் கடை உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாலிபர் மர்மசாவு வழக்கில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும், 10 மாதங்களுக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story