தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரையில் இருந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் பாதையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தென்னை மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் யானை கூட்டம் புகுந்து தென்னை மற்றும் வாழைகளை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலர் வடகரை ஜாகிர் உசேன் கூறுகையில், “கடந்த ஐந்து நாட்களாக 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை மற்றும் வாழைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நள்ளிரவுக்கு மேல் வரும் யானைகள் அதிகாலை வரை விளை நிலங்களுக்குள் புகுந்து சாகுபடியை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் ரஹ்மானியாபுரம் குடியிருப்பு பகுதியிலும் யானைகள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story