தோட்டத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கிய ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்


தோட்டத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கிய ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 25 July 2021 1:59 AM IST (Updated: 25 July 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தோட்டத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தம்மம்பட்டி
சேலம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தோட்டத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் சோதனை
சேலம் மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை நடப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஸ்ரீஅபினவ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு குட்கா பொருட்களை பறிமுதல் செய்வதுடன், பதுக்கியவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தம்மம்பட்டி போலீசார் அங்குள்ள பஸ்நிலையம் எதிரே உள்ள கடையில் சோதனை நடத்தினர். அங்கு 10 பாக்கெட் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தோட்டத்தில் பதுக்கல்
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று முன்தினம் இரவு தம்மம்பட்டி நடுவீதியில் உள்ள பிரகாஷ் என்பவரது கடையில் போலீசார் அதிரடியாக நுழைந்து விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த பிரகாஷ், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் குட்காவை ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறினார்.
தொடர்ந்து பிரகாஷ் சொன்ன தோட்டத்தில், அதாவது, உடையார்பாளையம் சுடுகாடு செல்லும் வழியில் தொடக்கப்பள்ளி எதிரே உள்ள நாயக்கர் தோட்டத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு போலீசார் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது மூட்டை, மூட்டையாக குட்கா, பான்பராக் உள்ளிட்டவை இருந்தன. அதனை போலீசார் பறிமுதல்செய்தனர்.
ரூ.50 லட்சம் மதிப்பு
இதுதொடர்பாக பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், குட்கா, பான்பராக் பொருட்கள் 101 மூட்டைகள் இருந்தது எனவும், அதன் மதிப்பு ரூ.50 லட்சம் எனவும் கூறியதாக தெரிகிறது. உடனே போலீசார் பிரகாசை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறையில் அடைத்தனர். கைதான பிரகாஷ், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய வர்த்தக அணி பா.ஜனதா பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story