81 கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் 52 பேர் கைது


81 கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் 52 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2021 2:00 AM IST (Updated: 25 July 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சரகத்தில் கடந்த 15 நாட்களில் 81 கள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததுடன் 52 பேர் கைதாகி உள்ளதாக என்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தெரிவித்தார்.

சேலம்
சேலம் சரகத்தில் கடந்த 15 நாட்களில் 81 கள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததுடன் 52 பேர் கைதாகி உள்ளதாக என்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தெரிவித்தார்.
நாட்டு துப்பாக்கிகள்பறிமுதல்
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் நேற்று மாலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர் சேலம் சரகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் மற்றும் குற்ற வழக்குகளில் துரிதமாக குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து ஐ.ஜி. சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் 29 பேர், தாங்கள் கள்ளத்தனமாக வைத்திருந்த துப்பாக்கிகளை தாங்களாகவே முன்வந்து போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர். மேலும் 52 பேரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
517 பேர் கைது
மலை பகுதிகளில் வசிப்பவர்களிடம் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் அறிவுறுத்தி வருகிறோம். இன்னும் 2 நாட்களுக்குள் கள்ள துப்பாக்கிகளை தாங்களாக ஒப்படைக்கவில்லை என்றால் போலீசார் அவர்களை கண்காணித்து கைது செய்வார்கள்.
கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 23 நாட்களில் சேலம் சரகத்தில் 8 டன் புகையிலை பொருட்கள், ரூ.7 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்தம் மதிப்பு ரூ.80 லட்சத்து 91 ஆயிரத்து 640 ஆகும். இதுதொடர்பாக 13 பெண்கள் உள்பட 517 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மாவட்ட எல்லைகளில்...
சேலம் சரகத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 36 பேர் கைதாகி உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்துவதை தடுக்க அந்தந்த மாவட்ட எல்லைகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொப்பூர் பகுதியில் குறுகலான பாதையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் வாகனங்கள் மெதுவாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் குற்றங்களை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஐ.ஜி. சுதாகர்கூறினார்.
பேட்டியின் போது சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபினவ் (சேலம்), சரோஜ்குமார் தாக்கூர் (நாமக்கல்), கலைச்செல்வன் (தர்மபுரி), சாய்சரண் தேஜஸ்வி (கிருஷ்ணகிரி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story