75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறப்பு


75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறப்பு
x
தினத்தந்தி 25 July 2021 2:47 AM IST (Updated: 25 July 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டன.

அரியலூர்:

நூலகங்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கினால் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் நூலகங்களும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நேற்று முதல் தமிழகம் முழுவதும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி 75 நாட்களுக்கு பிறகு பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று நூலகங்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டதால் வாசகர்கள் முககவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்வத்துடன் நாளிதழ்கள், புத்தகங்களை வாசித்து சென்றதை காணமுடிந்தது. முன்னதாக வாசகர்கள் நூலகத்திற்கு நுழையும் முன்பு, அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது.
அனுமதியில்லை
மேலும் அவர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நூலகங்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், 14 வயதிற்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story