உழவர் சந்தையில் கடைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


உழவர் சந்தையில் கடைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 25 July 2021 2:47 AM IST (Updated: 25 July 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்- ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் உழவர் சந்தையில் கடைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் கடந்த 2000-ம் ஆண்டில் உழவர் சந்தை தொடங்கப்பட்டு நன்கு இயங்கி வந்த நிலையில், தற்சமயம் நுகர்வோர்கள் அதிகம் வராததால் உழவர் சந்தை இயங்கவில்லை. விவசாயிகளின் காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி வீணாவதை தடுத்திடவும், நுகர்வோர்களுக்கு தரமான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைத்திடவும் உழவர் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு இலவசமாக எடை போடும் தராசு, வாடகை இல்லாத கடை, இலவச குடிநீர், இலவச மின்சாரம் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை உழவர் சந்தையில் வைத்து வியாபாரம் செய்து பயன்பெறலாம். மேலும் நுகர்வோர்கள் வெளிசந்தையை விட குறைவான, நியாயமான விலையில் மிகவும் தரமான காய்கறிகள் வாங்கி பயன்பெறலாம். விளைபொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து விற்க கடை ஒதுக்கீடு செய்து தரப்படும். உழவர் சந்தையில் சிற்றுண்டி மற்றும் தேநீர் கிடைக்க சிற்றுண்டி உணவகம் அமைத்து கொடுக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் விளைவித்த பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை வைத்து விற்பனை செய்ய தனிக்கடை ஏற்பாடு செய்து தரப்படும். அதேபோல் சுய உதவிக்குழுக்களுக்கு ஆங்கில காய்கறிகள் மட்டும் வைத்து விற்பனை செய்ய மிக குறைந்த மாத வாடகையுடன் கடை ஒதுக்கீடு செய்யப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களுடன் உழவர் சந்தை நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து விண்ணப்பித்து, அடையாள அட்டை பெறலாம். மேலும் விவரங்களுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர்களை 9943127461, 9942232170, 8940778775, 9626485818 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story