சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 24 July 2021 9:22 PM GMT (Updated: 24 July 2021 9:22 PM GMT)

அரியலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

அரியலூர்:

ஆக்கிரமிப்புகள்
அரியலூர் பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சாலையோர கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் நாளாக, நாளாக அந்த கடைகளுக்கு கீற்றுக்கொட்டகை அமைக்கப்பட்டு, நிரந்தர கடைகளாக மாறியது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் தெரு முழுவதும் கிராமங்களில் உள்ள சந்தைப்பகுதி போன்று காட்சியளித்தது.
ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் இந்த சாலையையொட்டி போலீஸ் நிலையம், தீயணைப்பு நிைலயம், நீதிமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மாவட்ட நூலகம், தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. அவற்றின் முன்புறம் சாலையோர பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன.
அகற்றம்
இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு வாரமாக அனைவருக்கும் தகவல் கொடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நேற்று நகராட்சி ஆணையர் மனோகரன் தலைமையில் மார்க்கெட் தெரு, பஸ் நிலையம், தேரடி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களை மூடி, அதன் மீது அமைக்கப்பட்டு இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னரே தற்போது, கழிவுநீர் வாய்க்கால்கள் வெளியே தெரிகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி, சேதமடைந்த பகுதிகளை சரி செய்து, குப்பைகளை அகற்றி மழைநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையை அகலப்படுத்தி கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்க வேண்டும். சாலையின் நடுவில் மின் கம்பங்கள் அமைத்து, இரவில் அதிக ஒளிதரும் விளக்குகள் பொருத்தி, அரசு அலுவலகங்கள் அதிகமாக இருக்கும் அந்த பகுதியை அரியலூரில் அடையாளமாக மாற்ற நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், வருவாய்த்துறை ஆகியவை ஒன்றாக இணைந்து பணிகளை ெதாடங்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கை ஆகும்.

Next Story