கோவையில் நூலகங்கள் திறப்பு


கோவையில் நூலகங்கள் திறப்பு
x
தினத்தந்தி 25 July 2021 3:35 AM IST (Updated: 25 July 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நூலகங்கள் திறக்கப்பட்டதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை

கோவையில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நூலகங்கள் திறக்கப்பட்டதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நூலகங்கள் திறப்பு

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்ததால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்பட்டு வந்தது. 

இதன்படி கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வந்தன. எனவே நூலகங்களையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புத்தக வாசகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 இதன்படி 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 242 நூலகங்களும் நேற்று திறக்கப்பட்டன.

கிருமி நாசினி தெளிப்பு

இதன்படி கோவை ஆர்.எஸ். புரம் மைய நூலகம் நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த வாசகர்கள் ஒவ்வொருவராக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு நூலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. அப்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

வழக்கமாக ஆர்.எஸ்.புரம் நூலகத்திற்கு 500 பேர் வரை வருவார்கள். நேற்று முதல் நாள் என்பதால் 50-க்கும் குறைவான நபர்களே நூலகங்களுக்கு வந்திருந்தனர். இனிவரும் நாட்களில் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பு

இதுகுறித்து மாவட்ட நூலக அதிகாரி யுவராஜ் கூறியதாவது:-
நூலகங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்தி இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், புத்தகங்கள் கிருமி நாசின் மூலம் சுத்தப்படுத்தப்படும். அதன் பின்னரே மறுநாள் வாசகர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

நூல்கள் வழங்கும் பிரிவில் நூல் இரவல் வழங்கும் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர் கட்டாயம் கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நீண்ட இடைவேளைக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் மற்றும் புத்தக வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story