இருளர் இன மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்


இருளர் இன மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்
x
தினத்தந்தி 25 July 2021 7:42 AM IST (Updated: 25 July 2021 7:42 AM IST)
t-max-icont-min-icon

இருளர் இன மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அச்சரப்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி கன்னிகோவில் பகுதியில் வசிக்கும் இருளர் இன மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாதி சான்றிதழை வழங்கினார். 

இதில் மதுராந்தகம் தாசில்தார் பர்வதம்மாள், அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் ராகுல் நாத் இருளர் குடியிருப்புகளுக்கு அருகே வரும்போது, அந்த பகுதியில் இருளர்கள் மண் அள்ளிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் உடனடியாக சரி செய்யுங்கள் என்று கூறினார். 

கலெக்டர் முன்பாகவே பேரூராட்சி மேலாளர் சக்திகுமார் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் வரவழைத்து வேறு இடத்தில் இருந்து மண் கொண்டு வந்து உடனடியாக சரி செய்தனர். மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி பேசி விட்டு, பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊழியர்களை பாராட்டினார்.

அதன் பிறகு கலெக்டர் ராகுல்நாத் இடைக்கழி நாடு பேரூராட்சிக்கு சென்றார். பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர். ஆலம்பரக்கோட்டை குப்பம் அருகே துறைமுகம் அமைப்பதற்கான சாதக, பாதகம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

அங்கு வந்த மீன்வர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து முகையூர் படகு குழாமை பார்வையிட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். அவருடன் செய்யூர் தாசில்தார் கே.ராஜா, இடைக்கழி நாடு பேரூராட்சி செயல் அலுவலர் டி.ஜி.எழிலரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story