மாமல்லபுரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளுடன் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதிக்க வேண்டும்
கொரோனா 3-வது அலை பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளுடன் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று விடுதி, ஓட்டல் நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மாமல்லபுரம்,
கொரோனா 2-வது அலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக தொற்று ஏற்பட்ட காரணத்தால் மாமல்லபுரத்தில் 2 மாதத்திற்கு சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டு கேளிக்கை விடுதிகள், தங்கும் ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுற்றுலாவுக்கான தடை நீக்கப்பட்டு, பயணிகள் வருகைக்கு அனுமதிக்கப்பட்டது.
அதேபோல் மூடப்பட்ட தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஓட்டல்கள் வழிகாட்டி விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுற்றுலா வரும் பயணிகள் மூலம் மாமல்லபுரத்தில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கும் ஓட்டல், விடுதி, உணவக நிர்வாகிகளை அழைத்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் துறை, வருவாய் துறை, பேரூராட்சி துறை சார்பில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் மணிவண்ணன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், மாமல்லபுரம் துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர் விடுதி, ஓட்டல் நிர்வாகங்கள் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு விதிமுறைகளுடன் எப்படி தங்க வைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
அப்போது நட்சத்திர விடுதி, தங்கும் ஓட்டல், கேளிக்கை விடுதி நிர்வாகங்கள் தங்கும் விடுதிகளில் தங்க வரும் பயணிகளுக்கு கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே வரவேற்பு அறைகள் வரை அவர்களை அனுமதித்து பிறகு, முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே அறைகளில் தங்க அனுமதிக்க வேண்டும்.
அறைகளில் பயணிகள் குளர்சாதன வசதி பயன்படுத்த அனுமதிக்க கூடாது. சாதாரண அறைகளை போலவே குளிர்சாதன அறைகளை அவர்கள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். நட்சத்திர ஓட்டல்களில் முக்கிய விருந்து நிகழ்ச்சிகளிலும், திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின்படி விருந்தினர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் மாமல்லபுரத்தில் தங்கும் விடுதி, ஓட்டல்கள், உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
விடுதி நிர்வாகத்தினர் கூறும்போது:-
மாமல்லபுரத்தில் நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒவ்வொரு முறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக விடுதி, ஓட்டல் பணியாளர்கள் பலர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதற்கு வழிவகை செய்யும் வகையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஓட்டல், விடுதி பணியாளர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் தனியாக முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதற்கு விரைவில் ஏற்பாடு செய்வதாக பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உறுதி அளித்தார். மேலும் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் அதிகாரிகள் சிலர் பேசும்போது:-
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் நள்ளிரவு 12 மணி வரை மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தற்போது அனுமதி ரத்து செய்யப்பட்ட நீச்சல் குளங்களில் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் நட்சத்திர விடுதிகள் சீல் வைக்கப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும், சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் அனைத்து ஓட்டல், விடுதிகளிலும் முகப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறும் காவல் துறை, பேரூராட்சி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக விடுதி, ஓட்டல் நிர்வாகத்தினர் அதிகாரிகளிடம் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story