போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சென்னையில் முக்கிய குற்றவாளி கைது


போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சென்னையில் முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 25 July 2021 9:49 AM IST (Updated: 25 July 2021 9:49 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

தூத்துக்குடியில் இருந்து மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 26 கிலோ ஹசிஷ் எனப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டது இலங்கையைச் சேர்ந்த வசந்தன் என்ற பிரசாந்த் என்பதும், அவர் சென்னையில் தங்கியிருப்பதும் தெரியவந்தன.

வசந்தன் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும், வாகன சோதனையில் இருந்து தப்பிக்கவும் குடும்பத்தினர் போன்று ஆண், பெண்களை பயன்படுத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தன. அதைத்தொடர்ந்து, அவரைப் பிடிக்க மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு எம்.சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த வசந்தன் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அமித் கவாதி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Next Story