புளியந்தோப்பில் ஒரே நாள் இரவில் சம்பவம்: மாநகராட்சி உரிமம் ஆய்வாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
புளியந்தோப்பு பகுதியில் ஒரே நாள் இரவில் சென்னை மாநகராட்சி உரிமம் ஆய்வாளர் உள்பட 2 பேரின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்கள், 2 கடை மற்றும் 2 வீடுகளின் பூட்டை உடைத்தும் கைவரிசை காட்டி உள்ளனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உரிமம் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அய்யனார் (வயது 41). இவர், புளியந்தோப்பு வ.உ.சி நகர் 7-வது தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கினார்.
நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, அவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த கூரியர் தபால் நிறுவன ஊழியரான நரேஷ்குமார் (19) என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
மேலும் புளியந்தோப்பு வ.உ.சி.நகரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரது பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள், புளியந்தோப்பு வீரா செட்டித் தெருவை சேர்ந்த சிவராம் (40) என்பவரது அடகு கடை, புளியந்தோப்பு திரு.வி.க. 3-வது தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுதாகரன் ஆகியோரின் வீடுகளின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
புளியந்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே கும்பல்தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story