கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்
ஆடிப்பெருக்கு விழா நெருங்கி வருவதால் பொருட்கள் வாங்க திருப்பூரில் உள்ள கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்
திருப்பூர்
ஆடிப்பெருக்கு விழா நெருங்கி வருவதால் பொருட்கள் வாங்க திருப்பூரில் உள்ள கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
புதுமார்க்கெட் வீதி
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். இதுபோல் ஞாயிற்றுக்கிழமைதோறும் தொழிலாளர்களுக்கு விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினத்தில் திருப்பூரின் அருகில் உள்ள மாவட்டங்களான ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
ஆனால் தொலைதூர மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தான் இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் பலரும் குவிந்தனர்.
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு இன்னும் ஒரு வாரத்தில் வர உள்ள நிலையில் பலர் புத்தாடைகள் எடுக்க ஜவுளிக்கடைகளில் குவிந்தனர். இதுபோல் வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றனர். இதனால் நேற்று புதுமார்க்கெட் வீதி களைகட்டியது.
இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. போலீசாரும் ரோந்து சுற்றி வந்தனர். ஊரடங்கு தளர்வு எதிரொலியின் காரணமாக வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்னம்பாளையம் சந்தை
இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கொரோனா ஊரடங்கு தளர்வின் எதிரொலியாலும் தென்னம்பாளையம் சந்தையில் மீன் உள்ளிட்டவைகளை வாங்க ஏராளமானவர்கள் காலையில் இருந்தே குவியத்தொடங்கினர். சிறிது நேரத்தில் கூட்டம் அலைமோதியது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது.
பலரும் தங்களுக்கு தேவையானவற்றை முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தை மூடப்பட்டது. இதையடுத்து, மீன் கடைகள் சந்தை அருகே உள்ள பகுதிகளில் பலர் அமைத்திருந்தனர். இங்கு மீன் பிரியர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story