3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராமநாதபுரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் திருட முயன்ற 2 பேர் உள்பட 3 பேர் மீது ஒரே நாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் திருட முயன்ற 2 பேர் உள்பட 3 பேர் மீது ஒரே நாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது.
ரோந்து
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 27-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முதுகுளத்தூர் செல்வநாயக புரம் முதல் கடம்பங்குளம் விலக்கு ரோடு பகுதியில் சிலர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது பயங்கர ஆயுதங்களுடன் இருந்தது தெரியந்தது.
உடனடியாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டி தயாராகி கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 9 அரிவாள்களுடன் மேலகன்னிசேரி வலம்புரி மகன் அருண்குமார், புளியங்குடி ராஜேந்திரன் மகன் கந்தன் தமிழரசன் (வயது36), இளையாங்குடி சிங்காரவேலு மகன் சோலைராஜா சுரேஷ் (35) உள்பட 9 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் இவர்களில் கந்தன் தமிழரசன் மற்றும் சோலைராஜா சுரேஷ் ஆகியோர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார்.
கைது
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் அழகுராஜா (24) என்பவர் சாதி தலைவர் ஒருவரின் படம் அணிந்த சட்டையுடன் கடந்த மாதம் மேலகன்னிசேரி பகுதிக்கு சென்றாராம். அதை கண்ட அப்பகுதியினர் கண்டித்ததுடன் அரிவாளால் அவரையும், அவரின் நண்பரான சக்திமுருகன் என்பவரையும் தாக்கினார்களாம்.
இதுகுறித்து சக்திமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலகன்னிசேரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் நாகேந்திரன் (24), பாலமுருகன் மகன் அஜித்குமார் (21) ஆகியோரை கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
இவர்களில் அஜித்குமார் இதுபோன்று தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். இதன்படி மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில்கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மேற்கண்ட 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story