வேலூர் ஜெயிலில் கைதிகள் அறையில் கஞ்சா பறிமுதல். ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
வேலூர் ஜெயிலில் கைதிகள் அறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்
வேலூர் ஜெயில்
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலின் எதிரே பாஸ்டல் சிறை அமைந்துள்ளது. இங்கு சிறார் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்த சிறை கட்டிடம் தற்போது பரோலில் வெளியே சென்று வந்த கைதிகள், புதிதாக வரும் கைதிகள், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்த கைதிகளை தனிமைப்படுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியான பின்னரே மத்திய ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். பாஸ்டல் சிறையில் ஜெயில் காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் சில கைதிகள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக ஜெயில் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் நேற்று முன்தினம் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணிபிரியதர்ஷினி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கைதிகள் தங்கியிருந்த அறையில் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. இதை பறிமுதல் செய்து கஞ்சாவை பதுக்கி வைத்த கைதிகள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறை காவலர்களின் பாதுகாப்பை மீறி கஞ்சா பயன்பாடு இருந்துள்ளதால், பணியில் இருந்த காவலர்கள் கவனக்குறைேவ இதற்கு காரணம் என உயர் அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே பணியில் இருந்த தலைமை காவலர் இளையராஜா, முதல்நிலை காவலர் செல்வகுமார், வார்டன் அஜித்குமார் ஆகியோரை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கைதிகளுக்கு காவலர்களே கஞ்சா வினியோகம் செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story