புதுச்சேரியில் இருந்து விக்கிரவாண்டி வழியாக காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது ரூ.2 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து விக்கிரவாண்டி வழியாக காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வழியாக புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் ராமலிங்கம், சிவமணி , திருஞானசம்பந்தம் ஆகியோர் விக்கிரவாண்டி பகுதிக்கு விரைந்து சென்று, வாகன சோதனையில்ஈடுபட்டனர்.
காரை மடக்கினர்
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை அவர்கள் நிறுத்த முயன்ற போது, அதில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடன் மதுவிலக்கு போலீசார், கட்டு்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் மதுவிலக்கு போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர்.
அப்போது துறவி கிராமம் அருகே அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை சோதனை செய்த போது அதில், 9 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
2 வாலிபர்கள் கைது
காரில் வந்தவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா கருங்குழி கிராமத்தை சேர்ந்த சக்கரபாணி மகன் லெமின் (வயது 25), ரவி மகன் சரண்ராஜ் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story