மீன்கள் விலை கிடுகிடு உயர்வு


மீன்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 25 July 2021 10:09 PM IST (Updated: 25 July 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

கடலுர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
 அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மீன் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மின்வாங்க அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலை முதலே ஆர்வமுடன் திரண்டனர். ஆனால் நேற்று எதிர்பார்த்ததை விட மீன்களின் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், கடலின் நீரோட்டம் மாற்றம் காரணமாக மீனவர்களின் வலைகளில் அதிகளவு மீன்கள் சிக்கவில்லை. இதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது.

வஞ்சிரம் மீன்

 இதன்காரணமாகவே  மீன்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற சங்கரா, பாறை போன்ற மீன் வகைகள் நேற்று ரூ.400-க்கு விலைபோனது. அதேபோல் ரூ.600-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ரூ.800 முதல் ரூ.900 வரை விலை போனது. ரூ.200-க்கு விற்ற இறால் ரூ.300-க்கும், ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும் விற்ற கனவா மீன்கள் நேற்று ரூ.250 முதல்  ரூ.300 வரையும் விலை போனது. இது தவிர ரூ.80-க்கு விற்ற கிளி மற்றும் கோலாமீன்கள் ரூ.120-க்கு விற்பனையானது என்றனர்.
கடலூர் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவு மற்றும் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீ்ன் வாங்காமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது.

அபராதம்

 இதற்கிடையே கடலூர் முதுநகர் போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கடலூர் துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத, முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Next Story