கோவையில் ஊரடங்கு நேரத்தில் குறைந்து இருந்த காற்று மாசு அளவு மீண்டும் அதிகரிப்பு
கோவையில் ஊரடங்கு நேரத்தில் குறைந்து இருந்த காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை
கோவையில் ஊரடங்கு நேரத்தில் குறைந்து இருந்த காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப் பட்டதுடன், தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
இதனால் கோவையில் காற்றின் மாசு அளவு 80 சதவீதம் வரை குறைந்தது. பின்னர் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதால் போக்குவரத்து தொடங்கப்பட்டதுடன், தொழிற் சாலைகளும் இயங்கின.
இதனால் காற்றின் மாசு அளவு அதிகரித்தது. இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த மே மாதத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்தும் முடங்கியது.
அளவிடும் கருவிகள்
கோவையில் கவுண்டம்பாளையம், சிட்கோ தொழிற்பேட்டை, கலெக்டர் அலுவலக வளாகம் ஆகிய 3 இடங்களில் காற்றில் உள்ள மாசு அளவை அளவிட கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு நேரத்தில் அதிகாரிகள் காற்றில் உள்ள மாசு அளவு குறித்து அளவீடு செய்தனர். இதில் காற்றின் மாசு அளவு குறைந்து இருந்தது தெரியவந்தது.
தற்போது ஊரடங்கு தளர்வு குறைக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு தொழிற்சாலைகளும் திறக்கப்பட்டு உள்ளன. தற்போது அதிகாரிகள் அளவீடு செய்தபோது காற்றின் மாசு அளவு மீண்டும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
காற்று மாசு அளவு குறைந்தது
காற்றில் பல்வேறு துகள்கள் காணப்படுகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால் துகள்களாக உருவாகின்றன.
இதுதவிர வாகனங்களின் புகை கலந்துள்ள கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவையும் காற்றில் கலக்கின்றன.
காற்றின் மாசு அளவு அதிகபட்சமாக பி.எம்.10 எனப்படும் துகள்களின் அளவு 100 வரை இருக்கலாம். கோவையில் வழக்கமாக 60 முதல் 70 வரை இருக்கும். இந்தநிலையில் ஏப்ரல் மாத இறுதியில் கவுண்டம்பாளையத்தில் காற்றின் மாசு அளவு 49 ஆக இருந்தது, மே மாதத்தில் 37 ஆக குறைந்தது.
மீண்டும் அதிகரிப்பு
சிட்கோவில் ஏப்ரலில் 51 ஆகவும், மே மாதத்தில் 42 ஆகவும், கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரலில் 47 ஆகவும், மே மாதத்தில் 37 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் கோவையில் காற்று மாசு அளவு பி.எம்.10 என்ற அளவில் 85 ஆக பதிவாகி உள்ளது. இதன்படி கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த காற்று மாசு அளவு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
காற்றின் மாசு அதிகரித்தாலும் மரங்கள் அதிகமாக வளர்ப்பதன் மூலம் அதன் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் மரங்களை வளர்க்க முன்வருவதுடன், டயர்கள், குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story