முன்னாள் அமைச்சர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு


முன்னாள் அமைச்சர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு
x
தினத்தந்தி 25 July 2021 11:09 PM IST (Updated: 25 July 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.68 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் 
முன்னாள் அமைச்சர்
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடுகள் உள்பட 26 இடங்களில்  கடந்த 22-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 
இதில் ரூ.25½ லட்சம் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த நேரத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையிலேயே சோதனையும் நடைபெற்றது. 
ரூ.2.68 கோடி சொத்துகள் 
இதில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 8 இடங்களில் நிறுவனங்களை வாங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2016-ம் ஆண்டில் மே 23-ந்தேதி நிலவரப்படி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சத்து 91 ஆயிரத்து 378 ஆக இருந்தது.  இது 2021-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி நிலவரப்படி ரூ.8 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 648 அளவுக்கு உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  இதில் ரூ.2 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரத்து 487 மதிப்பிலான சொத்துக்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது. இது வருமானத்தை விட 55 சதவீதம் அளவுக்கு கூடுதலாகும். இவை அனைத்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
சொத்து தொடர்பான தகவல்கள்
மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கர் ரூ.8 கோடி மதிப்பில் நிறுவனங்களை வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் ரெயின்போ டையர்ஸ் என்ற பெயரில் 6 இடங்களில் கரூரில் சாயப்பட்டறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 90 லட்சத்து 81 ஆயிரத்து 500 ஆகும். 
ரெயின்போ புளூமெட்டல்ஸ் என்ற பெயரில் 2 இடங்களில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மதிப்பு ரூ.4 கோடியே 48 லட்சத்து 24 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரது சொத்து தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. 
வழக்குப்பதிவு
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்களது வங்கி லாக்கர் அறையை திறந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story