கேரளாவில் பறவை காய்ச்சல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


கேரளாவில் பறவை காய்ச்சல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 26 July 2021 12:10 AM IST (Updated: 26 July 2021 12:10 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு இருப்பதால், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நாமக்கல்:
பறவை காய்ச்சல்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூராசுண்டு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென கொத்துக்கொத்தாக இறந்தன. இதுகுறித்து அறிந்ததும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். 
இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருவனந்தபுரம், ஆலப்புழாவில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகள் இறந்ததற்கு பறவை காய்ச்சல் தான் காரணம் என தெரிய வந்தது. மேலும் கூடுதல் பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள உயர் தொழில்நுட்ப பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
சிறுவன் பலி
ஏற்கனவே கொரோனா, ஜிகா வைரஸ் என அச்சத்தில் வாழும் கேரள மக்களுக்கு அடுத்து பறவை காய்ச்சல் பரவல் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்தநிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் தொற்று பீதியை அடுத்து தமிழக கோழிப்பண்ணைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன.
வாய்ப்பில்லை
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து கோழிப்பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கோழிப்பண்ணைக்கு வரும் வாகனங்களுக்கும், வெளியே செல்லும் வாகனங்களுக்கும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஏற்கனவே உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், இங்கு பறவை காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முட்டை விற்பனை சரியும்
இருப்பினும் தமிழகத்தில் இருந்து தினசரி சுமார் 1 கோடி முட்டைகளும், அதிக அளவில் இறைச்சி கோழிகளும் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரள மாநிலத்தில் ஏற்பட்டு உள்ள பறவை காய்ச்சலால், அங்கு முட்டை மற்றும் கோழி விற்பனை சரிவடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது தமிழக கோழிப்பண்ணையாளர்களின் வர்த்தகத்தை பாதிக்கும் என்பதால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story