சேந்தமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை: கிரசர் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்-ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்தது தொடர்பாக கிரசர் உரிமையாளரை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம்:
கிரசர் தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி பேரமாவூரை சேர்ந்தவர் கனகசபை (வயது 54). இவருடைய மனைவி ராஜலட்சுமி. மகன் மணிவேல் (20). கனகசபையும், மணிவேலும் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள ஸ்ரீபாலன் (37) என்பவருக்கு சொந்தமான கிரசரில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிவேல், ஸ்ரீபாலன் கிரசருக்கு வேலைக்கு செல்லாமல் வேட்டாம்பட்டி பகுதியில் உள்ள வேறு ஒரு கிரசருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீபாலன் கனகசபையிடம் விசாரித்ததுடன், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கனகசபை மனவேதனையில் காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலை கனகசபை வெளியே சென்று வருவதாக மனைவி ராஜலட்சுமியிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ராஜலட்சுமி, மணிவேல் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கனகசபை பேரமாவூர் அருகே குட்டை பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குட்டைக்கு சென்று, கனகசபை பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். இதனிடையே அவரது தற்கொலைக்கு காரணமான கிரசர் உரிமையாளர் ஸ்ரீபாலனை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள் திடீரென அக்கியம்பட்டி-நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கனகசபையை மிரட்டிய கிரசர் உரிமையாளர் ஸ்ரீபாலனை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் திணறிய வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
வழக்குப்பதிவு
இதையடுத்து மரத்தில் பிணமாக தொங்கிய கனகசபை உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் ஸ்ரீபாலன் மீது சேந்தமங்கலம் போலீசார் கனகசபையை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேந்தமங்கலம் அருகே கிரசர் உரிமையாளர் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story