கொல்லிமலையில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கொல்லிமலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.
சோளக்காடு பயணியர் மாளிகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, மகளிர் திட்டத்துறைகளின் மூலம் கொல்லிமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, துறைவாரியாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து சோளக்காடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அன்னாசி பழங்கள் விற்பனை முறை குறித்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் பழங்குடியின மாணவ, மாணவிகளுடன் இணைய வழி வகுப்பு குறித்து கலந்துரையாடினார்.
வாசனை பொருட்கள்
செம்மேடு அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் அவர் கலந்துரையாடினார். அரசு தோட்டக்கலை பண்ணையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கொல்லிமலையில் விளைவிக்கப்பட்ட பலா பழம், அன்னாசி பழம், செவ்வாழை பழம் உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் வாசனை பொருட்களான கிராம்பு, லவங்கம், பிரியாணி இலை, ஜாதிக்காய் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததை பார்வையிட்டார்.
பின்னர் வாழவந்தி நாடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மருத்துவர்களிடம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராமசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கார்த்திக், தோட்டக்கலைத்துறை அலுவலர் கேசவன், வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) கலைச்செல்வி, கொல்லிமலை தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரவிச்சந்திரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story