திறக்கப்படாத சிறுவர் அறிவியல் பூங்கா
பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்கா திறக்கப்படாததால், பெற்றோர் சிலர் தங்களது குழந்தைகளுடன் சுவர் ஏறி குதித்து பூங்காவிற்குள் சென்று விளையாடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
ஊரடங்கால் மூடப்பட்ட பூங்கா
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுவர் அறிவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்- சிறுமிகள் விளையாடும் வகையில் ஊஞ்சல்கள், சறுக்கல் உபகரணம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி இயங்கும் வகையில், பல்வேறு அறிவியல் உபகரணங்களும் உள்ளன.
பெரம்பலூர் நகரில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால் இந்த பூங்காவிற்குத்தான் பெரம்பலூர் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், இந்த சிறுவர் அறிவியல் பூங்கா மூடப்பட்டது.
திறக்க கோரிக்கை
பின்னர் தமிழகத்தில் பூங்காக்களை திறக்க அரசு உத்தரவிட்டும், பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. பூங்காவை திறக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் கொரோனா 3-வது அலை வந்தால் சிறுவர்களை பாதிக்கும் என்பதால் பூங்கா இன்னும் திறக்கப்படாமல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்ள மட்டுமாவது பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விஷ ஜந்துகளின் கூடாரமாக...
இந்நிலையில் மூடப்பட்டு காட்சியளிக்கும் பூங்காவில் தொடர்ந்து பராமரிப்பு பணி சரியாக மேற்கொள்ளப்படாததால் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் சில உடைந்து சேதமடைந்து காட்சியளிக்கின்றன.
ஆனாலும் விடுமுறை நாட்களில் அனுமதியின்றி ெபற்றோர் உள்ளிட்ட பொதுமக்களில் சிலர் குழந்தைகளுடன் பூங்காவின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று விளையாடி பொழுதை கழிக்கின்றனர். தற்போது பூங்கா பராமரிக்கப்படாததால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவை பராமரித்து, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிறுவர்-சிறுமிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.
Related Tags :
Next Story