அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- முதன்மை செயலாளர் உத்தரவு


அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- முதன்மை செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2021 8:15 PM GMT (Updated: 25 July 2021 8:15 PM GMT)

கொந்தகையில் அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதன்மை செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டு உள்ளார்.

திருப்புவனம்,

கொந்தகையில் அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதன்மை செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டு உள்ளார்.

ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன. இந்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்காக கொந்தகை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது.
 இந்த அருங்காட்சியக பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதன்மை செயலாளர் கூறியதாவது:-

விரைந்து முடிக்க வேண்டும்

தொல்லியல் துறை மூலம் ரூ.12 கோடியே 21 லட்சம் செலவில்  அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர்  சிறப்பு கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறார். பொதுப்பணித்துறை அலுவலர்கள் அருங்காட்சியக பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை காட்சிக்கு வைக்க முடியும். எனவே கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கீழடியில் நடைபெற்று வரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை அவர் ஆய்வு செய்தார். அங்கு கிடைத்த அரிய வகை பொருட்களையும் பார்வையிட்டு அதன் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது தொல்லியல் துறை மாநில துணை இயக்குனர் சிவானந்தம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story