மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை; அடவிநயினார் அணை நிரம்பியது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அடவிநயினார் அணை நிரம்பியது.
தென்காசி:
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அடவிநயினார் அணை நிரம்பியது. குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாபநாசம் அணை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 110.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,033 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனம், குடிநீருக்காக 1,399 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 119.16 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 716 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 73.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு, 150 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
கருப்பாநதி
கடனாநதி அணை நீர்மட்டம் இரண்டரை அடி உயர்ந்து 74 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 339 கனஅடியாகவும், வெளியேற்றம் 70 கனஅடியாகவும் உள்ளது. ராமநதி நீர்மட்டம் 71.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 46 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 30 கனஅடியாகவும் உள்ளது.
72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.96 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வருகிற 25 கனஅடி தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே குண்டாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 18 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அடவிநயினார்
கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழையால் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. தற்போது அணைக்கு வரும் 43 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், வடகரை, ஆய்க்குடி, கம்பளி, சாம்பவர்வடகரை, சுரண்டை உள்பட 18 கிராமங்களில் உள்ள 43 குளங்களுக்கு செல்லும். இதனால் கார்சாகுபடிக்கான விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி விட்டனர்.
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
நேற்று முன்தினம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது. மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -1, கடனா -10, குண்டாறு -2, அடவிநயினார் -5, ஆய்க்குடி -4, சிவகிரி -1.
Related Tags :
Next Story