பெலகாவியில் வெள்ள பாதிப்புகளை எடியூரப்பா நேரில் ஆய்வு செய்தார்
முதல்-மந்திரி எடியூரப்பா பெலகாவியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெலகாவி: முதல்-மந்திரி எடியூரப்பா பெலகாவியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கரையோரம் வசிக்கும் மக்கள்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி மற்றும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா, ஹாசன், வட கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கதக், உப்பள்ளி-தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக உத்தர கன்னடாவில் கடும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே போல் வட கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
வெள்ள பாதிப்புகள்
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் பெலகாவிக்கு சென்றார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் அறிக்கையை தாக்கல் செய்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண உதவிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
பெலகாவியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2, 3 நாட்களில் கிருஷ்ணா ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
90 நிவாரண முகாம்கள்
கடந்த 2020-ம் ஆண்டு மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு நிவாரணத்தை அறிவித்தது. இந்த நிவாரண தொகை கிடைக்க பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு விரைவாக நிவாரணத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெலகாவி மாவட்டத்தில் மட்டும் 113 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராம மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு 90 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி பணியாற்ற வேண்டும். நிவாரண பணிகளில் தடை ஏற்பட்டால் உடனே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
ரூ.1,200 கோடி நஷ்டம்
இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேசும்போது கூறியதாவது:-
பெலகாவி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.1,200 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 1,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 305 பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் உடனடியாக சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.170 கோடி நிதி ஒதுக்க வேண்டும். கிருஷ்ணா ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. அதனால் அலமட்டி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும். ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு படகுகளை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் பேசினார்.
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேசுகையில், "வெள்ள பாதிப்புகள் ஏற்படும் நேரத்தில் அவசர தேவைக்காக வாங்கப்படும் மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டும். இந்த நிதியை தவிர இன்னும் அதிகமான நிதி தேவைப்பட்டால் அதற்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளுக்கு உரிய நிவாரணத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும்" என்றார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்ரீமந்த் பட்டீல், சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமனி, மேல்-சபை அரசு கொறடா மகந்தேஷ் கவடகிமட உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story