ஒரே பகுதியில் 10 நிமிடங்களுக்கு மேல் நிற்க போலீசாருக்கு அனுமதி கிடையாது; போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவு
பெங்களூருவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், ஒரே பகுதியில் 10 நிமிடங்களுக்கு மேல் நிற்பதற்கு அனுமதி கிடையாது என்று கூறி போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், ஒரே பகுதியில் 10 நிமிடங்களுக்கு மேல் நிற்பதற்கு அனுமதி கிடையாது என்று கூறி போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
ரோந்து போலீசார் மீது...
பெங்களூருவில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக போலீசாருக்கு தனியாக ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக செல்லும் போலீசார் ஒரே பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நீண்ட நேரம் அங்கேயே நிற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் ஒரே பகுதியில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க புதிய விதிமுறைகள், வழிகாட்டுதல்களை போலீஸ் கமிஷர் கமல்பந்த் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்
பெங்களூருவில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் ஒரே இடத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் நிற்பதற்கு அனுமதி கிடையாது. ஏதாவது முக்கிய சம்பவங்கள் நடந்திருந்தால் மட்டுமே 10 நிமிடங்களுக்கு மேல் நிற்கலாம். இல்லையெனில் ரோந்து பணியில் ஈடுபடுவோர் தொடர்ந்து வாகனங்களில் வலம் வந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதனை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடி கண்காணிக்க மென்பொருள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் 272 ஹொய்சாலா ரோந்து வாகனங்களும், 232 சீட்டா வாகனங்களும் உள்ளன. அந்த வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்.
கூடுதலாக 40 வாகனங்கள்
அந்த கருவி மூலமாக ரோந்து வாகனங்கள் இருக்கும் இடம் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கப்படும். ஒரே இடத்தில் ரோந்து வாகனம் நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு அலுவலகத்தில் இருந்தே எச்சரிக்கை விடப்படும். அத்துடன் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பற்றி தினமும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ரோந்து பணியின் போது ஏதாவது குற்றங்கள் நடந்தால், அதற்கு ரோந்தில் ஈடுபடும் போலீசாரே முழு பொறுப்பாகும். பெங்களூருவில் ரோந்து பணியை தீவிரப்படுத்த கூடுதலாக 40 ஹொய்சாலா வாகனங்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story