தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.
மைசூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.
தொடர் கனமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணைகளில் இருந்து பன்மடங்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்தப்பகுதிகளை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கொண்ட மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும் கணிசமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ்., கபினி
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 110.10 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில், நேற்று காலை நிலவரப்படி 2,279.94 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 27,771 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி வழியாக தமிழ்நாடு நோக்கி செல்கிறது.
இந்த அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story