3¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


3¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 July 2021 9:54 PM GMT (Updated: 25 July 2021 9:54 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பு நடவடிக்கைகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 900-க்கு மேல் இருந்தது. தற்போது 750-க்கும் கீழ் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து 2-வது அலை பரவல் இருந்துதான் வருகிறது. 

இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சிறிய மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மையான மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. அதன்படி செயல் திட்டம் வகுக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி

பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாது என்பதால், அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக கர்ப்பிணிகள் இறக்கும் அபாயம் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரியில் மொத்தம் 7 லட்சத்து 21 ஆயிரத்து 949 மக்கள் தொகை உள்ளது. இதில் 18 வயதுக்கு மேல் 6 லட்சத்து 42 ஆயிரத்து 132 பேர் உள்ளனர். இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

மக்கள் தொகையில் பாதிக்கு மேல்...

முதல் டோஸ் 3 லட்சத்து 13 ஆயிரத்து 925 பேருக்கும், 2-வது டோஸ் 74 ஆயிரத்து 916 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் பாதி பேருக்குமேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் 2½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது.

தடுப்பூசி ஒதுக்கும் அளவை பொறுத்து அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story