தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடற்கூறு தேர்வு தொடங்கியது


தூத்துக்குடியில்  போலீஸ் பணிக்கான உடற்கூறு தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 26 July 2021 2:14 PM GMT (Updated: 26 July 2021 2:14 PM GMT)

தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடற்கூறு தேர்வு நேற்று தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டப்பந்தயம், உயரம், மார்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடற்கூறு தேர்வு நேற்று தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டப்பந்தயம், உயரம், மார்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.
போலீஸ் பணி
2020-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி (ஆண்) விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துதேர்வு ஏற்கனவே கடந்த 13.12.2020 அன்று நடந்தது. 
இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,662 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1231 ஆண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 2,893 ஆண் விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
சான்றிதழ் சரிபார்ப்பு
முதல் நாளான நேற்று 500 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். முதலில் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம், மார்பளவு ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தம் நடைபெற்றது. 
கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வு தூத்துக்குடி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ரெயில்வே டி.ஐ.ஜி ஜெயகவுரி நேரடி மேற்பார்வையில் நடந்தது. 
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான அதிகாரிகள் தேர்வை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தேர்வு பணிகளை பார்வையிட்டார். இந்த தேர்வு வருகிற 2-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற உடல்திறன் தேர்வுகள் வருகிற 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
பெண் போலீசுக்கான உடற்தகுதி தேர்வு
இதே போன்று, பாளையங்கோட்டையில் பெண் போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தென்காசி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

Next Story