2-வது ரோப்கார் நிலையம் அமைக்கும் பணி தீவிரம


2-வது ரோப்கார் நிலையம் அமைக்கும் பணி தீவிரம
x
தினத்தந்தி 26 July 2021 8:05 PM IST (Updated: 26 July 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில், 2-வது ரோப்கார் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பழனி:

ரோப்கார் சேவை

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனிக்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரெயில், படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில் ரோப்கார் சேவை மூலம் அடிவாரத்தில் இருந்து விரைவாக செல்ல முடிவதால் அனைவரும் ரோப்காரையே விரும்புகின்றனர்.
 
இந்தநிலையில் திருவிழா, விசேஷ நாட்களில் ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள ரோப்கார் மூலம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 400 பேர் மட்டுமே செல்ல முடியும்.

ரூ.73 கோடியில் திட்டம் 

இதைக்கருத்தில் கொண்டு 2-வது ரோப்கார் நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழனி முருகன் கோவிலில், 2-வது ரோப்கார் சேவை திட்டத்தை செயல்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. 

அதன்படி ரூ.73 கோடியில் 2-வது ரோப்கார் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக ரோப்கார் நிலையத்துக்கான திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது.

மேலும் பழனி அடிவாரம் மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் அமைய உள்ள இடத்தில் பாறையின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் ரோப்கார் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

பாறைகள் உடைக்கும் பணி

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் நிலைய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக அடிவாரத்தில் ரோப்கார் நிலையம் அமையவுள்ள இடத்தில் அஸ்திவார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக எந்திரங்களை கொண்டு பாறைகள் உடைக்கப்பட்டு வருகின்றன.

Next Story