திருமுருகன்பூண்டி அருகே போலீஸ் நிலைய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமுருகன்பூண்டி அருகே போலீஸ் நிலைய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருமுருகன்பூண்டி அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் போலீஸ் நிலைய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் நிலையம்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் அருகே ஒரு கட்டிடத்தில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் ராக்கியாபாளையத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் பொங்காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி போலீஸ் நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்று, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அந்த இடத்தில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தனர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 14-ந்தேதி அப்பகுதி மக்கள் சார்பில் சுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டிட பணிகள்
இந்த நிலையில் கட்டிட பணிகளை நிறுத்தக்கோரி ராக்கியாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள், ஊர் பொதுமக்கள், நெசவாளர்கள் பயன்படுத்தி வரும் இடமாக இது உள்ளது. மேலும் மாரியம்மன் கோவில் மற்றும் பொங்காளியம்மன் கோவில் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கும், விழா காலங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், வாகனங்கள் நிறுத்துவற்கும் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் புதிதாக உருவாகி உள்ள சூரியாநகர், அம்மன்நகர், சொர்ணபுரி ரிச்லேண்ட் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தும் பொது பாதையாகவும் உள்ளது.
இந்த இடத்தில் போலீஸ் நிலையம் அமைந்தால் போலீஸ் நிலையத்திற்கு ஒயர்லெஸ் செய்திகள் வரும்போது கோவிலில் பூஜை செய்வதற்கும், மணி அடிப்பதற்கும், மேளதாளங்கள் வாசிப்பதற்கும் இடையூறாக அமையும். எனவே போலீஸ் நிலையம் கட்டுதவற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த பிரச்சினை குறித்து உயரதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும் என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story