வடபாதிமங்கலம் உச்சுவாடியில் சேதம் அடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


வடபாதிமங்கலம் உச்சுவாடியில் சேதம் அடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 July 2021 4:01 PM GMT (Updated: 26 July 2021 4:01 PM GMT)

வடபாதிமங்கலம் உச்சுவாடியில் சேதம் அடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பகுதியில் உச்சுவாடி கிராமத்துக்கும், வடபாதிமங்கலம் கடைவீதிக்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே சிமெண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் மிகவும் குறுகலானதாகும்.

உச்சுவாடி இரட்டை தெரு, ஒற்றை தெரு, மாரியம்மன் கோவில் தெரு, தாமரைக்குளம் தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, பொன்னியம்மன்கோவில் தெரு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். உச்சுவாடியில் உள்ள அங்கன்வாடி பள்ளி மாணவர்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

கடைவீதி, பஸ் நிலையம், வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் இந்த பாலத்தை கடந்து தான் அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். பாலத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து சிறு சிறு விரிசல்கள் காணப்படுகிறது. பாலத்தின் தடுப்பு தூண்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் தடுப்பு கம்பிக்கு பதில், மூங்கில் மரம் கட்டப்பட்டு உள்ளது.

பாலம் வழியாக செல்வோர் தடுமாறி ஆற்றில் விழுவது அடிக்கடி நடப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சேதம் அடைந்த நிலையில் உள்ள பாலத்தை கடந்து சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story