மண்சரிவால் வீடு, சாலை சேதம்
பந்தலூரில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சாலை சேதம் அடைந்தது. மேலும் நிவாரண முகாமில் ஆதிவாசி மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி
பந்தலூரில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சாலை சேதம் அடைந்தது. மேலும் நிவாரண முகாமில் ஆதிவாசி மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பருவமழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக மழை பொழிகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மஞ்சூர் அருகே எமரால்டு குட்டிமணி நகர் பகுதியில் தனலட்சுமி என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அவர் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
மண்சரிவு
பந்தலூர் தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து அண்ணா நகரில் மருதமுத்து என்பவரது வீட்டின் அருகில் மண் சரிந்து, பெரியசாமி என்பவரது வீட்டின் மீது விழுந்தது.
மேலும் புஞ்சைக்கொல்லியில் ராஜேந்திரன், ஜெகதம்பாள் ஆகியோரது வீட்டின் அருகில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. தேவாலா அட்டியில் இருந்து நாடுகாணி செல்லும் சாலையோரம் மண்சரிவால் உடைப்பு ஏற்பட்டது. மானூர் பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து 3 மின்கம்பங்கள் உடைந்தன.
முகாமில் தங்க வைப்பு
இதற்கிடையில் வட்டக்கொல்லி ஆதிவாசி காலனியில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது. மேலும் மணல்வயல் ஆதிவாசி காலனியில் வெள்ளம் புகுந்தது.
இதனால் அந்த 2 கிராமங்களை சேர்ந்த 30 பேரை அம்பலமூலா அரசு தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் வருவாய்த்துறையினர் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் செய்து கொடுக்கப்பட்டன.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-12.4, அவலாஞ்சி-27, கிண்ணக்கொரை-14, அப்பர்பவானி-25, கோத்தகிரி-22, கீழ் கோத்தகிரி-11, கூடலூர்-47, தேவாலா-96, செருமுள்ளி-90, பாடாந்தொரை-97, ஓவேலி-24, பந்தலூர்-156, சேரங்கோடு-72 என பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பந்தலூரில் 15 சென்டி மீட்டர் மழை பதிவானது.
Related Tags :
Next Story