நிதி இல்லை என்ற காரணத்தை கூறி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நாட்டிலேயே மோசமான பல்கலைக்கழகத்துடன் இணைப்பதா? அரசின் முடிவுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம்


நிதி இல்லை என்ற காரணத்தை கூறி  ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நாட்டிலேயே மோசமான பல்கலைக்கழகத்துடன் இணைப்பதா? அரசின் முடிவுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம்
x
தினத்தந்தி 26 July 2021 10:12 PM IST (Updated: 26 July 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

நிதி இல்லை என்ற காரணத்தை கூறி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நாட்டிலேயே மோசமான பல்கலைக்கழகத்துடன் இணைப்பதா? என்று அரசின் முடிவுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண் முகம் கண்டனம் தெரிவித்து பேசினார்.

விழுப்புரம், 

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தின்போது, விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, இந்த பல்கலைக்கழகம் பெயரளவில் தான் இருந்ததே தவிர செயல்படவில்லை. இதனால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும் எனவும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, கூட்டு பல்கலைக்கழகமாக மாற்றப் படுகிறது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். 

கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடும் தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, விழுப்புரத்திலேயே இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில்            அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

நம்பிக்கை துரோகம்

கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் கனவை சிதைக்கிற வகையில் அந்த துறையை கையில் வைத்துள்ள அமைச்சர் பொன்முடி, இங்குள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட பார்க்கிறார்.  அதற்காக அந்த பல்கலைக்கழகத்தில் கட்டிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை என்கிறார். 

தேர்தல் தேதி அறிவிப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்த தேதி 25.2.2021, உடனே மறுநாளான 26.2.2021 அன்று அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டார். 

அதுபோல் அன்றைய தினமே தற்காலிக கட்டிடத்தில் அந்த பல்கலைக்கழகம் மாவட்ட கலெக்டரால் திறந்து வைக்கப்பட்டது. அன்று மாலையே தேர்தல் ஆணையம், சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அதன் பிறகு எந்த பணிகளும் நடக்கவில்லை, இதுதான் உண்மை.

ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் நிதி நெருக்கடி என்று காரணம் காட்டி பல்கலைக்கழகத்தை மூட நினைப்பது வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு செய்கின்ற மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் பல்கலைக்கழகத்தை சீர்குலைக்க பார்க்கிறீர்கள். 

சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம்

நிதி இல்லை என்று கூறி அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் சேர்க்க பார்க்கிறார்கள். இந்தியாவிலேயே மிக மோசமான, சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம்தான் அண்ணாமலை பல்கலைக்கழகம்.

 தகுதியே இல்லாதவர்கள் அங்கு பேராசிரியர்களாகவும், உதவி பேராசிரியர்களாகவும் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம் பல்கலைக்கழகத்தை சேர்த்தால் உருப்படுமா?

எங்கள் மீதுள்ள கோபம், அரசியல் காழ்ப்புணர்ச்சியை பல்கலைக்கழகம் மீது காட்டாதீர்கள். ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு எந்த காரணத்தாலும் பாதிப்பு ஏற்படக்கூடாது. ஜெயலலிதா பெயர் இருப்பது உங்களுக்கு உருத்துகிறது என்றால் நீங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். 

பொதுவான பெயராக சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பெயரை வைத்துக்கொள்ளுங்கள். எங்களுடைய நோக்கம் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே ஆகும். மாணவர்களின் நலனை பாதிக்கிற தவறான முடிவை கைவிடுங்கள். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story