வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து 8 குடும்பத்தை சேர்ந்த 20 பேர் தீக்குளிக்க முயற்சி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து 8 குடும்பத்தை சேர்ந்த 20 பேர் தீக்குளிக்க முயற்சி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 July 2021 10:16 PM IST (Updated: 26 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளை காலி செய்ய சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 8 குடும்பத்தை சேர்ந்த 20 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகா சிறுவள்ளிக்குப்பத்தை சேர்ந்த பரமேஸ்வரி, அஞ்சலை, காவேரி, கன்னிகா, கவுசல்யா, தெய்வானை, மீனாட்சி, மலர் ஆகிய 8 பேரின் குடும்பத்தை சேர்ந்த 20 பேர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். 

இவர்கள் அனைவரும் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனார். அப்போது அவர்கள் கூறியதாவது:-

 எதிர்ப்பு

நாங்கள் சிறுவள்ளிக்குப்பத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கூரை வீடு கட்டி வசித்து வருகிறோம்.  கடந்த 2018-ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தோம். எங்களுக்கு பட்டா வழங்க நிலஅளவை செய்து மனை பிரிவுகளாக பிரித்து வரைபடம் தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் நாங்கள் வீடு கட்டி குடியிருக்கும் வீட்டை இடித்து காலி செய்து விடுவதாக சொல்லி அரசியல் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அரசு அலுவலர்கள் எங்களை மிரட்டி வருகின்றனர். 

எனவே நாங்கள் வசித்து வரும் இடத்திற்கு அரசால், இலவச வீட்டுமனை மற்றும் வீடு வழங்கிட வேண்டும். இல்லையெனில் எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடமே ஒப்படைத்துவிட்டு  குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 

எனவே எங்களது குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட்டு எங்களுக்கு அதே இடத்திலேயே பட்டா வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story