வாய்மேடு பகுதியில் அதிக விளைச்சலால் தேங்காய் விலை வீழ்ச்சி அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
வாய்மேடு பகுதியில் அதிக விளைச்சலால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேடு, தாணிக்கோட்டகம், வெள்ளிகிடங்கு, வண்டுவாஞ்சேரி, அண்ணாப்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. கஜா புயலின் போது ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு தென்னை மரங்களில் தேங்காய் அதிக அளவில் காய்த்து வருகிறது. அதிக விளைச்சலால் தேங்காய் விலைவீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு தேங்காய் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.9-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது விற்பனை செய்யப்படும் தேங்காய் விலை வெட்டுவதற்கும், உறிப்பதற்கும், அதை சந்தைப்படுத்துவதற்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. எனவே இப்பகுதியில் இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேங்காய் கொள்முதல் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story