விழுப்புரத்தில் சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது


விழுப்புரத்தில் சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 26 July 2021 10:21 PM IST (Updated: 26 July 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது.


விழுப்புரம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

 இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் 20 மையங்களில் தொடங்கியது. 

அந்த வகையில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 2,256 ஆண்கள், 700 பெண்கள் என 2,956 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது.

உடற்தகுதி தேர்வு

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வுக்கு வரும் நபர்கள் தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுத்து அதற்கான மருத்துவ சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 மருத்துவ சான்று பெற்று வராதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதுபோல் 2 முக கவசம் அணிந்து வந்தவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அசல் சான்றிதழ்களுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

செல்போன் கொண்டு வர தடை செய்யப்பட்டது. மேலும் சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6 மணி முதல் 9 மணி வரை 300 தேர்வர்களும், 9 மணிக்கு மேல் 200 தேர்வர்களும் வர வேண்டும் என்று முறையாக அறிவிக்கப்பட்டு அதன்படி உடற்தகுதி தேர்வு நடந்தது. 

முதல் நாளான நேற்று தேர்வில் கலந்துகொள்ள 500 ஆண்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 90 பேர் வரவில்லை. மீதமுள்ள 410 பேருக்கு உடற்தகுதி தேர்வு தொடங்கியது.

ஓட்டம்

முதலாவதாக 410 பேரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும் உயரம் சரிபார்க்கப்பட்டது. இதில் உயரம் குறைவாக இருந்த 45 பேர் வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ள 365 பேருக்கு மார்பளவு சரிபார்த்தல் நடந்தது. இதில் 12 பேர் வெளியேற்றப்பட்டனர்.

 மீதமுள்ள 353 பேருக்கு 1,500 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த இலக்கை 7 நிமிடத்திற்குள் எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

330 பேர் தகுதி

இதில், 23 பேர் வெளியேற்றப்பட்டனர். 7 நிமிடத்திற்குள் ஓடி இலக்கை அடைந்த 330 பேர் அடுத்தகட்டமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறும் உடல்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்த தேர்வு பணியில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 300 பேர் ஈடுபட்டனர்.

இப்பணியை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பார்வையிட்டார். அப்போது சென்னை காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் பெருமாள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவநாதன், கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், சின்னராஜ், ராஜலட்சுமி, விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஏழுமலை, தீயணைப்பு அதிகாரிகள் ராபின்காஸ்ட்ரோ, சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story