பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2021 10:30 PM IST (Updated: 26 July 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

இலவச மனைப்பட்டா கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி, ஜூலை.
இலவச மனைப்பட்டா கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச மனைப்பட்டா
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி டி.வி. நகர் மதுரை வீரப்பன் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இதுதொடர்பாக கடந்த ஆட்சிக்காலத்தின் போது அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தனர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
சாலைமறியல்
இந்தநிலையில் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென அண்ணா சாலையில் பாண்லே பூத் முன் திரண்டனர். சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், சாலையில் அமர்ந்தும் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி அறிந்ததும் பெரியகடை இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிட மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தள்ளுமுள்ளு
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
உடனே          தொகுதி        எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தினை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story