திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் வற்றாமல் காட்சி அளிக்கும் தீர்த்த குளங்கள் பக்தர்கள் மகிழ்ச்சி
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தீர்த்த குளங்கள் ஆண்டு முழுவதும் வற்றாமல் காட்சி அளிப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவெண்காடு:-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தீர்த்த குளங்கள் ஆண்டு முழுவதும் வற்றாமல் காட்சி அளிப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நவக்கிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமாகும். சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் சிவபெருமான் இங்கு அகோரமூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது கூடுதல் சிறப்பாகும்.
முன்பு ஒரு காலத்தில் சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து 3 பொறிகள் தோன்றி இந்த பகுதியில் விழுந்ததாகவும், அதன் காரணமாக 3 தீர்த்த குளங்கள் தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் உள்ள 3 குளங்களில் தண்ணீர் ஆண்டு முழுவதும் நிரம்பி இருக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து கோவிலுக்கு வந்த கோவை சிவனடியார் கூட்டமைப்பை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ‘மிகவும் புனிதமான 3 குளங்களில், வாட்டும் வெயில் காலத்தில் கூட புனித நீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக நீராடினோம்’ என்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி முருகன் கூறுகையில், ‘இந்த கோவிலில் உள்ள 3 தீர்த்த குளங்களும் புனிதமானவை. இதை கருத்தில் கொண்டு 3 குளங்களையும் அடிக்கடி சுத்தம் செய்து, பராமரித்து வருகிறோம். குளத்தின் அடிப்பகுதியில் உள்ள ஊற்றுக் கண்களை சுத்தம் செய்வதால் தண்ணீர் ஊறுகிறது. தற்போது கோடை மழை அடிக்கடி பெய்வதால் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. கோவில் நிலத்தில் ஆழ்குழாய் இறக்கி குழாய்கள் மூலமும் தேவையான நேரத்தில் தண்ணீர் நிரப்பி பராமரித்து வருகிறோம்’ என்றார்.
கூழை வாய்க்கால்
இந்த கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் துரைராஜன் கூறுகையில், ‘சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 குளங்களுக்கு ஆண்டி வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். ஆனால் மழைக் காலங்களில் மட்டுமே ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் வருவதால் குளங்களுக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இதனை தவிர்க்க கோவிலின் அருகே ஓடும் கூழை வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குளங்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக பழமை வாய்ந்த சிறு வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் தண்ணீர் நிரப்பலாம். மேலும் இந்த வாய்க்காலில் அடிக்கடி தண்ணீர் வரத்து உள்ளது’ என்றார். கொளுத்தும் வெயிலிலும் தண்ணீர் வற்றாமல் காட்சி அளிக்கும் 3 தீர்த்த குளங்களும் வரப்பிரசாதமாக இருக்கிறது என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story